கனடா நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பேன் (François-Philippe Champagne) அமெரிக்கா விஜயம் செய்துள்ளார்.
வர்த்தகம் மற்றும் முக்கிய கனிமங்கள் (Critical Minerals) தொடர்பான உயர்மட்ட ஆலோசனைகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் தங்கியுள்ளார்.
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் “ஒரே சிந்தனையைக் கொண்ட பிற நாடுகளின்” பிரதிநிதிகளுடன் ஷாம்பேன் சந்திப்புகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும் முக்கிய கனிமங்களின் விநியோக சங்கிலிகள் குறித்த நிதியமைச்சர்கள் கூட்டத்திலும் ஷாம்பேன் பங்கேற்க உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் பேசிய ஷாம்பேன், கனடாவில் முக்கிய கனிமங்களின் அகழ்வு (extraction) மற்றும் சுத்திகரிப்பு (refining) பணிகளை வேகப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டதாக கூறியிருந்தார்.
அதேசமயம், முக்கிய கனிமங்களில் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலைமையிலிருந்து ஐரோப்பா விலகுவதற்கு கனடா உதவ முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜூன் மாதம் அல்பர்டா மாகாணத்தின் கானனாஸ்கிஸ் (Kananaskis) பகுதியில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில், முக்கிய கனிமங்கள் தொடர்பான செயல் திட்டம் மற்றும் உற்பத்தி கூட்டணி (Production Alliance) ஆகியவற்றை G7 நாடுகள் தொடங்கின.
அந்த கூட்டணியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் திட்டங்களை கடந்த அக்டோபரில் கனடா அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

