Mississauga வின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “Project Pelican” என்று பெயரிடப்பட்ட ஒரு வருட கால விசாரணை தொடர்பான விவரங்களை Peel பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ளது.
குறித்த கடத்தலில் ஒன்பது பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் Toronto ஐ சேர்ந்த 31 வயதான சஜ்கித் யோகேந்திரன் என்ற தமிழரும் உள்ளடங்குகின்றார்.
போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஒன்பது பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 500 கிலோகிராம் cocaine மீட்கப்பட்டிருந்தது. இந்த ஒன்பது பேரும் எல்லையைத் தாண்டி கனடாவிற்குள் சட்டவிரோத போதைப்பொருட்களைக் கொண்டு வர கனரக வாகனங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. விசாரணையின் போது, வர்த்தக வாகனங்கள் மற்றும் களஞ்சிய வசதிகளை கொண்ட நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவினர் என்பது கண்டறியப்பட்டது.
Canada Border Services Agency (CBSA) அதிகாரிகள் ஒன்றோரியோவின் Windsor இல் உள்ள Ambassador பாலத்தில் ஒரு வர்த்தக வாகனமொன்றை வழிமறித்ததாகவும், அந்த கனரக வாகனத்திலிருந்து 127 கிலோகிராம் cocaine மீட்கப்பட்டு குறித்த சாரதியும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதைவிட Point Edward பகுதியிலும் 50 கிலோகிராம் cocaine மீட்கப்பட்டது. இது Peel க்கு வேறு இடங்களில் இருந்து நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு நேரடியாக வந்தடையும் குற்றச்செயல்கள்மீது விழுந்த பாரிய அடி என தலைமைப் பொலிஸ் அதிகாரி நிஷான் துறையப்பா தெரிவித்துள்ளார்.
“Project Pelican” திட்டத்தின் போது கிட்டத்தட்ட $50 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தர்பத்தில் சந்தேக நபர்கள் சிலர் ஆயுதங்களை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறான ஒவ்வொரு கைதுகளின் போதும் எமது சமூகம் பாதுகாக்கப்படுகின்றதுடன் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதன் மூலம் ஒவ்வொரு உயிரும் காப்பாற்றப்படுகின்றது என்று பிரதித்தலைமைப் பொலிஸ் அதிகாரி Nick Milinovich கூறினார்.