கனடாவில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 50 மில்லியன் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ஒலிபெருக்கியில் இந்த போதைப்பொருள் தொகுதி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத்தின் மேலதிக பணிப்பாளர் ஜெனரல், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து அதிவேக கொரியர் சேவை மூலம் அது நாட்டிற்கு வந்தடைந்துள்ளது எனவும் அதன் உரிமையாளர் பதிவு செய்யப்படவில்லை என்று இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 9 ஆம் திகதி, இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, குறித்த பொருளை சந்தேகத்தின் பேரில் கைப்பற்றியது, எனினும் நீண்ட காலமாக எவரும் உரிமை கோராத காரணத்தினால் கடந்த 25 ஆம் திகதி சுங்க அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது.
பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இதனை ஆய்வு செய்ததில், குறித்த ஒலி பெருக்கியில் போதைப்பொருள் அடங்கிய 17 பக்கெட்டுகள், 862 கிராம் குஷ் கொண்ட 9 பக்கெட்டுகள் மற்றும் 4,014 கிராம் ஹஷிஷ் (8 பாக்கெட்டுகள்) ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன, இதன் பெறுமதி சுமார் . 50 மில்லியன் என தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன