கனடாவின் பிரச்சினைகளுக்குக் காரணம் புலம்பெயர்ந்தோர் அல்ல, கார்ப்பரேட் நிலச்சுவான்தாரர்களும், பெரிய பல்பொருள் அங்காடிகளும், ஏமாற்றுக்கார முதலாளிகளும்தான் காரணம் என்கிறது புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பொன்று.
Migrant Workers Alliance for Change என்னும் புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான கேரன் (Karen Cocq), கனடாவில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு, அநியாயமாக புலம்பெயர்ந்தோர் மீது பழி போடப்படுகிறது என்கிறார்.
கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு, விலைவாசி போன்ற பிரச்சினைகளுக்கு, கார்ப்பரேட் நிலச்சுவான்தாரர்களும், பெரிய பல்பொருள் அங்காடிகளும், ஏமாற்றுக்கார முதலாளிகளும்தான் காரணமேயொழிய புலம்பெயர்ந்தோர் அல்ல என்கிறார் கேரன்.
தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களால் கனேடிய இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கன்சர்வேட்டிவ் கட்சியினர் குற்றம் சாட்டுவதைக் குறித்து கேள்வி எழுப்பும் அவர், புலம்பெயர்ந்தோர் விவசாயம், மீன் பண்ணைகள் மற்றும் ட்ரக் தொழிலில் மட்டுமே ஈடுபடுகிறார்கள்.
இந்த பணிகளை, அதுவும் கோடைக்காலத்தில் செய்ய எந்த கனேடிய இளைஞரும் முன்வருவதில்லை என்கிறார்.
அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இனவெறுப்பை மக்களைப் பிரித்து, மக்களின் கோபத்தையும் விரக்தியையும் ஒருவருக்கொருவர் எதிராகவும், தொழிலாளர்கள் மீதும் திருப்புவதற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறார் அவர்.
புலம்பெயர்தலுக்கான ஆதரவு குறைந்து வருவது, கனடாவுக்கு புதிதாக வருவோருக்கு பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது என்று கூறும் கேரன், அவர்கள் வன்முறையையும் வெறுப்பையும் எதிர்கொள்ளும் நிலையையும் அது உருவாக்குகிறது என்றும் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள் பிரச்சினைகளை தீர்க்க தக்க நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வை மக்கள் கவனத்தை திசை திருப்ப பயன்படுத்துகிறார்கள், ஆனால், நிஜ வாழ்க்கையில் அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிறார்.