முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை மதித்து தான் நேற்று விஜேராம இல்லத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சட்டத்தை மதித்து 24 மணிநேரங்களுக்குள் தான் விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறியதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறியது குறித்து அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை மதித்து, இதுவரை எனக்கு சட்டபூர்வமாக ஒதுக்கப்பட்ட விஜேராம இல்லத்தை விட்டு நேற்று வெளியேறினேன். இதற்கு முன்னர் ஊடகங்களில் சிலர் விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறுமாறு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்ததை நான் கண்டிருக்கிறேன். மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத ஒரு குழு, மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மீது அதிருப்தி அடைந்து, தங்கள் திறமையின்மையை மறைக்க ஊடகங்களில் வெளியிட்ட அந்த அறிக்கைகளுக்கு நான் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், பின்னர், அவர்களால் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டவுடன், 24 மணி நேரத்திற்குள் விஜேராம இல்லத்தில் இருந்து விடைபெற்றேன். ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ என்ற நான், சட்டத்தின் முன் மற்றும் என் மக்கள் முன் மட்டுமே தலை வணங்குகிறேன்.
தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதேவேளை பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன். இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போராடினேன். சுவாசம் நம் அனைவருக்கும் பொதுவானது. இன, மத வேறுபாடு இல்லை என குறித்த பதிவில் குறிப்பிட்டார்.
மேலும், என் மூத்த மகன் நாமல் சொன்னது போல், நான் என் பயணத்தை தொடங்கிய எனது கிராமத்திற்குத் திரும்பியுள்ளேன். நாங்களே நிர்மாணித்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாகப் பயணித்தேன். மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞர் 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்குத் திருமதி பண்டாரநாயக்க வாய்ப்பளித்தவர். ஒரு இளம் நாடாளுமன்ற உறுப்பினராக நான் பின்பற்ற வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார். அவர் எங்களுக்கு ஒரு தலைவர் மற்றும் ஒரு தாய் என்று சொல்வது சரிதான்.
மக்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை அதிகமாக இருந்தன. அந்த உயர்ந்த நம்பிக்கை காரணமாக, கடந்த காலங்களில் சில சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ தனது இருதயத்தின் படியும் நாட்டிற்காகவும் முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு விலைமதிப்பற்றது எதுவுமில்லை. கடந்த காலத்திலும் இன்றும் நான் பெற்ற அதே மக்களின் அன்பைப் பெறுவது ஒரு பாக்கியம். அந்த பாக்கியத்தை யாரும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது.
விஜேராமவிலிருந்தாலும் அல்லது தங்காலையிலிருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவே. என்னைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்ததற்கு நான் பதிலளிக்க மாட்டேன். ஆனால் நான் உயிருடன் இருக்கும் வரை சிங்கக் கொடியின் நிழலில் இருக்கும் இந்த ஒன்றுபட்ட தாய்நாட்டை யாராவது காட்டிக்கொடுத்தால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் மீண்டெழுவேன் என உறுதியளிக்கிறேன். என குறித்த பதிவில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.