கடந்த வாரம் பிரதமர் மார்க் கார்னி மத்திய அரசு நுகர்வோர் காபன் வரியை இரத்து செய்வதாக அறிவித்தார், இந்த நடவடிக்கை ஏப்ரல் மாதத்தில் பெட்ரோலின் விலையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலுக்கான தற்போதைய காபன் வரி வரி லிட்டருக்கு 17.61 சதமாக உள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதி நிரப்பு நிலையங்களில் விலை லீற்றருக்கு 19.9 சதம் குறையும் என்று எதிர்பார்ப்பதாக தொழில்துறை ஆய்வாளர் டான் மெக்டீக் தெரிவித்தார்.
இந்நிலையில், நுகர்வோர் காபன் வரியைக் குறைப்பதற்கான மத்திய அரசாங்கத்தின் முடிவு, ஒன்றோரியோவில் எரிவாயு வரி குறைப்பை நிரந்தரமாக்கும் கொன்சவேடிவ்களின் மாகாண அரசாங்கத்தின் திட்டங்களுடன் முரண்படவில்லை என முதல்வர் டக் போர்ட் இன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மாகாண எரிவாயு வரியில் லீற்றருக்கு 5.7 சதம் குறைப்பு முதன்முதலில் ஜூலை 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, அத்துடன் அது திரும்பத்திரும்ப நீடிக்கப்பட்டது தற்போது ஒன்றோரியோ ஈயம் இல்லாத பெட்ரோலுக்கான வரி விகிதத்தை லீற்றருக்கு 14.7 சதத்திலிருந்து லீற்றருக்கு 9.0 சதமாக குறைத்தது. இந்த விலைக்குறைப்பை நிரந்தரமாக்குவதாக வழங்கிய தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையிலேயே இது நடைமுறைப்படுத்தப்படுவதாக முதல்வர் அலுவலகம் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது.
எனினும், காபன் வரியை வெளிப்படையாக எதிர்க்கும் டக் போர்ட் மாகாணத்தில் தொழில்துறை காபன் வரியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி நேரடியாக எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் கட்டணங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களும் செலவுகளைக் குறைப்பதற்கும், மக்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பதற்கும், பொருளாதார ரீதியாக நம்மை மேலும் போட்டித்தன்மையடையச் செய்வதற்கும் வழிகளைத் தேட வேண்டும் என்று முதல்வர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கிறேஸ் லீ அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.