கனடா மற்றும் ஏனைய ஏழு நாடுகளின் குழுவைச் சேர்ந்த உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தீவிரமாக எதிர்த்துப் போராடுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர்.
ஓட்டாவாவில் இரண்டு நாள் கூட்டத்தை முடித்த G7 அமைச்சர்கள், ஞாயிற்றுக்கிழமை உலகளாவிய ரீதியில் செயற்படும் குற்றத்துடன் தொடர்புடைய குழுக்கள் தங்கள் கொடூரமான நடவடிக்கைகளுக்கு நிதியளித்து இலாபம் ஈட்டும் செயற்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பில் G7 நாடுகள் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.
ஊழல், வன்முறை மற்றும் ஏனைய சட்டவிரோத வழிகள் மூலம் இலாபம், அதிகாரம் மற்றும் செல்வாக்கைத் தேடுவதில் நாடுகடந்த குற்றவியல் அமைப்புகள் இரக்கமற்றவை என்று G7 அமைச்சர்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர். உலகளாவிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் பயங்கரவாதம், சைபர் தாக்குதல்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை சுரண்டுவது ஆகியவற்றுடன் தொடர்பு பட்டிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Gary Anandasangaree தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி பொருளாதாரங்களின் முறைசாரா குழுவான G7, கனடா, France, ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய ராச்சியம் மற்றும் அமெரிக்கா என்பவற்றுடன் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கியுள்ளது.
கூட்டங்களில் பங்கேற்றவர்கள் புலம்பெயர்ந்தோர் கடத்தல் பிரச்சனை மற்றும் சர்வாதிகார அரசுகளால் புலம்பெயர் சமூகங்களை அச்சுறுத்துவது குறித்தும் ஆய்வு செய்தனர். அத்துடன், பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாத உள்ளடக்கத்தின் online சவால்களை கையாள்வதற்கான தந்திரோபாயங்கள், சைபர் குற்றம் மற்றும் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தின் இணையம் தொடர்பான பரிமாணங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

