இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (28) அறிவித்துள்ளது.
ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது அடுத்த ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் , நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, கனடா, நபீமியா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 20 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரின் முதல் போட்டி பெப். 7ஆம் திகதி மும்பையில் தொடங்குகிறது. இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சம்பியன் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் அமெரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.
மேலும் முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்திய அணி, பெப்ரவரி 15ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்பில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டி20 உலகக்கிண்ண தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளனர்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடரானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைபெறும் என்று இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் அறிவித்துள்ளன.
அந்தவகையில் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 7ஆம் திகதியும், இரண்டாவது போட்டி ஜனவரி 9ஆம் திகதியும், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜனவரி 11ஆம் திகதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளாது.
மேலும் இந்த தொடரின் அனைத்து போட்டிகளும், தம்புளையிலுள்ள ரங்கிரி தம்புளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முஹமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராவுப் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
இவர்கள் அனைவரும் தற்சமயம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடி வருவதன் காரணமாக இத்தொடரில் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அறிமுக விக்கெட் காப்பாளர் பேட்டர் கவாஜா நபி பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர அனுபவ சகலதுறைஆட்டக்காரர் ஷதாப் கானும் மீண்டும் பாகிஸ்தான் டி20 அணியில் இடம் பிடித்துள்ளார்.
இதுதவிர்த்து அப்துல் சமத், அப்ரார் அஹ்மத், பகர் ஜமான், சைம் அயுப், சாஹிப்சாதா பர்ஹான், நசீம் ஷா போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் தங்களின் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.

