5.1 C
Scarborough

இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு!

Must read

நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை  ஏற்படுத்தி  இலங்கையை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர  ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் பாராட்டுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும்  முயற்சிகளை வத்திக்கான் ஆதரிப்பதாகவும் வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் ஆண்டகை தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் , இன்று (04) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் ஆண்டகைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமோக வரவேற்பளித்ததோடு, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து அவருக்கு தெளிவுபடுத்தினார்.  இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 50  ஆண்டுகள் நிறைவடைந்துள்ள தற்போதைய நிலையில்  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் பேராயருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

பேராயரின்  இலங்கைக்கான விஜயம் நாட்டுக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வத்திக்கானுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரை நூற்றாண்டு கால இராஜதந்திர உறவுகள் நமது நாட்டிற்கு ஆன்மீக ரீதியாக மட்டுமன்றி, நாட்டில் மனித கண்ணியத்தை மேம்படுத்துவதிலும் பிரதானமாக அமைந்ததாகக்  குறிப்பிட்டார்.

இலங்கையின் கல்வித் துறைக்கு வழங்கிய ஒத்துழைப்பைப் போன்றே சுனாமி பேரழிவிற்குப் பின்னர் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு வத்திக்கான்  அளித்த உதவிகளையும், இதன்போது  நினைவு கூர்ந்த ஜனாதிபதி, கடந்த 50 ஆண்டுகளாக வத்திக்கான் காட்டிய ஆதரவு மற்றும் நட்புறவுக்கு நன்றி தெரிவித்தார்.

 XIV  ஆவது பாப்பரசர் லியோவின் உடல்நலன் குறித்தும் ஜனாதிபதி விசாரித்தோடு அவர் தொடர்ந்து  சிறந்த தேகாரோக்கியத்தையும் வலிமையையும் பெற பிராத்தித்ததோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய முன்னேற்றத்தை தானும் புனித பாப்பரசரும் பெரிதும் பாராட்டுவதாகக் கூறிய பேராயர் கல்லாகர் ஆண்டகை, XIV  ஆவது பாப்பரசர் லியோ விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து பரிசீலிப்பார் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

வத்திக்கானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள  பேராயர் கல்லாகர் ஆண்டகை நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களிடையேயும் அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில்,  நவம்பர் 8 ஆம்  திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.  அந்த சமயத்தில் அவர்  நாட்டின் பல முக்கிய இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

1975 செப்டம்பர் 6 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் ‘வத்திக்கானின் தொலைநோக்கு, உரையாடல் மற்றும் அமைதிக்கான அர்ப்பணிப்பு’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் ஆண்டகை பங்கேற்க உள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article