இந்தியாவுக்கு எதிராக திருவனந்தபுரம், கிறீன்ஃபீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (26) இரவு மின்னொளியில் நடைபெற்ற மூன்றாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்களால் மிக மோசமான தோல்வியைத் தழுவியது.
அத்துடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரில் மேலும் 2 போட்டிகள் மீதமிருக்க 0 – 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தொடரையும் இலங்கை பறிகொடுத்தது.
ரேனுகா சிங், தீப்தி ஷர்மா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், ஷபாலி வர்மாவின் அதிரடி அரைச் சதம் என்பன இந்தியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.
இன்றைய போட்டியில் மூன்று மாற்றங்களுடன் இலங்கை மகளிர் அணி களம் இறங்கிய போதிலும் தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக மூவரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.
விஷ்மி குணரட்ன, காவியா காவிந்தி, ஷஷினி கிம்ஹானி ஆகியோருக்குப் பதிலாக நிமாஷா மீப்பகே, இமேஷா துலானி, மல்ஷா ஸ்னேஹானி ஆகியோர் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் மீண்டும் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்த 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அணித் தலைவி சமரி அத்தபத்து (3), ஆரம்ப வீராங்கனையாக உயர்த்தப்பட்ட ஹசினி பேரேரா (25), ஹர்ஷித்தா சமரவிக்ரம (2), நிலக்ஷிக்கா சில்வா (4) ஆகிய நால்வரும் ஆட்டம் இழக்க 10ஆவது ஓவரில் இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 45 ஓட்டங்களாக இருந்தது.
இந் நிலையில் இமேஷா துலானி, கவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை பெரு வீழ்ச்சியிலிருந்து ஓரளவு மீட்டனர்.
கவிஷா டில்ஹாரி 20 ஓட்டங்களுடனும் இமேஷா துலானி 27 ஓட்டங்களுடனும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
கௌஷினி நுதியங்கனா 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ரேணுகா சிங் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அணியில் மீண்டும் இணைந்த தீப்தி ஷர்மா 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
113 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 13.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.
ஸ்ம்ரித்தி மந்தனா மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். ஆனால், ஷபாலி வர்மாவுடன் 27 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்தார்.
தொடர்ந்து ஷபாலி வர்மாவும் ஜெமிமா ரொட்றிகஸும் 2ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதில் ஜெமிமாவின் பங்களிப்பு வெறும் 9 ஓட்டங்களாகும்.
அதன் பின்னர் ஷபாலி வர்மாவும் ஹாமன்ப்ரீத் கோரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.
இந்தத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான அரைச் சதத்தைக் குவித்த ஷபாலி வர்மா இந்தியாவின் வெற்றியை இலகு படுத்தினார்.
42 பந்துகளை எதிர்கொண்ட ஷபாலி வர்மா 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 79 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஹாமன்ப்ரீத் கோர் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவிச்சில் கவிஷா டில்ஹாரி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
கிறிஸ்மஸ் தினத்தில் அரசுக்கு கிடைத்த பெருந்தொகை பணம்
கிறிஸ்மஸ் தினத்தன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் மூலம் 54 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி மேம்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் மட்டும் சுமார் 140,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்ததாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாளில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, கடந்த புதன்கிழமை அதிவேக நெடுஞ்சாலைகளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

