இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் கூடுதல் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என்பன இணக்கம் தெரிவித்துள்ளன.
குறித்த பிராந்தியத்தில் ஆழமாக காலூன்றுவதற்கு சீனா முயற்சித்துவரும் சூழ்நிலையிலேயே இப்படியொரு வியூகத்தை டில்லி மற்றும் கன்பரா வகுத்துள்ளன.
அமெரிக்காவில் நடைபெறும் குவாட் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தல், இந்தோ – பசுபிக் பாதுகாப்பு, தொழில்நுட்ப உதவி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை என்பன தொடர்பில் இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் சம்பந்தமாகவும் ஜெய்சங்கர் மற்றும் பெனி வோங் ஆகியோர் ஆராய்ந்துள்ளனர்.