ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களைமீறி தொடர் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபடும் வடகொரியாவின் நடவடிக்கையை ஆஸ்திரேலியா உள்ளிட்ட குவாட் நாடுகள் கண்டித்துள்ளன.
குவாட் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘குவாட்” அமைப்பு என்பது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டணியாகும்.
இந்தோ – -பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
குவாட் அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டை இவ்வருடம் இந்தியாவில் நடத்துவதற்கும், வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டை அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தென் சீன கடலில் எந்தவொரு ஒருதலைப்பட்சமான செயல்களையும், அழுத்தங்கள் மூலமாக நிலைமையை மாற்ற முயற்சிப்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
ஆசியான் முயற்சிகளுக்கு எங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.” – எனவும் வெளிவிவகார அமைச்சர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள், திட்டமிட்டவர்கள் மற்றும் நிதியுதவி அளித்தவர்களை உடனடியாக நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.