புதிய பாப்பரசர் லியோவின் தொடக்க திருப்பலி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பயணமாகியுள்ள பிரதமர் மார்க் கார்னி சனிக்கிழமையன்று இத்தாலி தலைநகரான ரோமில் உக்ரைன் ஜனாதிபதி விலாடிமர் செலென்ஸ்கியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது உக்ரைனிற்கான கனடாவின் உறுதியான, அசைக்க முடியாத ஆதரவை கார்னி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கனடாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த செலன்ஸ்கி கனேடியப் பிரதமரை உக்ரைன் இற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதன் போது ரஸ்யா மற்றும் உக்ரைனிற்கு இடையிலான அண்மைய அமைதிப் பேச்சுவார்த்தை பற்றி உக்ரைன் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார். அதில் இருதரப்பும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் பேச்சுவார்தையின் போது ரஸ்ய ஜனாதிபதியின் வருகைக்காக தாம் காத்திருந்ததாகவும் ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அடுத்தமாதம் கனடாவில் நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டை செலன்ஸ்கி நடத்துவதை தான் எதிர்பார்ப்பதாக கார்னி கூறினார்.
இப்பயணத்தின் போது இத்தாலியின் 16 ஆம் நூற்றாண்டு கட்டிடமான Chigi அரண்மனையில் அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை சந்தித்த கனேடிய பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அன்றைய தினமே கார்னி ஐரோப்பிய ஒன்றியத் தலைவரான Ursula von der Leyen இனையும் சந்தித்து செயற்கை நுண்ணறிவு, சுத்தமான எரிசக்தி மற்றும் கனிமங்கள் ஆகிய துறைகளின் கூட்டாண்மை பற்றி கலந்துரையாடினார்.
கனேடியப் பிரதமரின் இந்த பயணத்தின் போது 13 கத்தோலிக்க லிபரல் நாடாளுமன்ற உறுபினர்கள் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.