2.8 C
Scarborough

ஆப்கானில் உணவு பஞ்சம்!

Must read

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் குளிரால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மத தீவிரவாதத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் ஆப்கானிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தலிபான்களின் ஆட்சிக்குப் பிறகு அமுலுக்கு வந்த சமூக கட்டுப்பாடுகளால் நிலைமை மேலும் சிக்கலாகி உள்ளது.

ஆப்கன் மக்களில் சுமார் 2.30 கோடி – அதாவது அந்த நாட்டின் மக்கள் தொகையில் பாதி – பேர் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளதாக கடந்த 22-ம் திகதி செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு ஒரு கட்டுரை மூலம் தெரிவித்தது.

சர்வதேச நாடுகளின் உதவியுடன் உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவிகளை வழங்கி வந்தது.

இந்நிலையில், இந்த திட்டத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா தற்போது நிறுத்திவிட்டது.

இதையடுத்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தி உள்ள உலக உணவுத் திட்டம், ஆப்கானிஸ்தானில் 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் தற்போதைய குளிர்காலத்தில் குளிரோடு பட்டினியையும் எதிர்கொண்டு வருவதாக கடந்த வாரம் எச்சரித்தது.

ஆபத்தான நிலையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 லட்சம் கூடி இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

தலிபான்களின் ஆதிக்கம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்ற ஆப்கன் அகதிகளில் பெரும்பாலானோர் அந்நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். இதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் 71 லட்சம் ஆப்கனியர்கள் நாடு திரும்பி உள்ளனர்.

தள்ளாடும் பொருளாதாரம், தொடர் வறட்சி, இரண்டு மிகப் பெரிய நிலநடுக்கங்கள், ஈரான், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து திரும்பிய மக்கள் ஆகியவற்றால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், உலக உணவு திட்டத்தின் உதவியும் பெருமளவில் குறைந்ததால் மக்களின் நிலை மேலும் மோசடைந்துள்ளது.

பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தாலிபான் அரசாங்கம் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் ஏராளமான பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

இந்த மாதத்தின் நடுப்பகுதியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர், ‘‘நிலநடுக்கங்கள், மனிதாபிமான உதவிகளுக்கான அணுகல் குறைவு, வேலைக்குச் செல்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அதிர்ச்சிகளால் ஆப்கனிஸ்தானில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பல ஆண்டுகளில், சர்வதேச உணவு விநியோகம் இல்லாத முதல் குளிர்காலம் இது.

2026-ல் கிட்டத்தட்ட 2.2 கோடி ஆப்கனியர்களுக்கு ஐ.நாவின் உதவி தேவைப்படும். நன்கொடையாளர்களின் பங்களிப்பு குறைந்ததால், எங்கள் அமைப்பு உயிர் காக்கும் உதவி மிகவும் அவசரமாகத் தேவைப்படும் 39 லட்சம் மக்கள் மீது கவனம் செலுத்தும்.

கடந்த ஆண்டு பற்றாக்குறை காலத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் எண்ணிக்கை 56 லட்சமாக இருந்தது. அதாவது 56 லட்சம் பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு இத்தகைய உதவிகளை 10 லட்சம் மக்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நாங்கள் நன்றிக் கடன் பட்டவர்களாக இருக்கிறோம். ஆனால், 2026ம் ஆண்டு குறித்து யோசிக்கும்போது, உணவுப் பாதுகாப்பின்மை, சுகாதாரத் தேவைகள், அடிப்படை சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’’ என வேதனை தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article