அமெரிக்க அதிபர் Donald Trump, குறிப்பிட்ட சில தொழில்துறைகளைப் பாதிக்கும் வரிவிதிப்புகளைக் குறைப்பது குறித்து இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அதற்கு கனடா தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இரும்பு, அலுமினியம் மற்றும் மரம் ஆகிய துறைகளுக்கு குறுகிய காலத்தில் நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
தற்போது வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரங்கள் 2026-ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் Canada-U.S.-Mexico ஒப்பந்தத்தின் (CUSMA) ஒட்டுமொத்த மீளாய்வு செயல்முறைக்குள் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பதாக Carney கூறினார்.
கடந்த இலையுதிர் காலத்தில், Ontario மாகாண அரசு அமெரிக்காவில் வரிவிதிப்புக்கு எதிரான விளம்பரம் ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து, Trump இந்தப் பேச்சுவார்த்தைகளை இரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலக்கெடு நெருங்கி வருவதைக் கருத்தில் கொள்ளும்போது, ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, என்று வியாழக்கிழமையன்று பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மத்திய-மாகாண ஒத்துழைப்புக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, Ontario மாகாண முதல்வர் Doug Ford உடன் இணைந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இருப்பினும், இந்தத் துறைகள் தொடர்பாக அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர விரும்பினால், நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம், என்றும் Carney குறிப்பிட்டார்.

