கனடாவுக்கு எதிரான வரி இடைநிறுத்தம் நீக்கப்படுமா என்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் புதன்கிழமையை விடுதலை நாள் என்று அழைத்தார் அதாவது ஏனைய நாடுகள் மீது வரிகளை விதிப்பதன் மூலம் அமெரிக்க வருமானத்தை அதிகரிக்க அவர் விரும்புவதை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை டொனல்ட் ட்ரம்ப் விதிக்கவுள்ள வரிகளில் கனடா மற்றும் மெக்சிக்கோ நாடுகள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என வெள்ளைமாளிகை அதிகாரியொருவர் கூறியுள்ள நிலையில் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் திங்கட்கிழமை கருத்து தெரிவிக்கும் போது வரி விலக்குகள் எதுவும் இருக்காது என்று கூறினார்.
தற்போது கனடா எல்லையில் கைப்பற்றப்படும் பெண்டானில் அளவு குறைவு என்பதுடன் கடந்த வாரம் வெளியிடப்பட்ட வருடாந்த அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில், சட்டவிரோத மருந்துகள் மற்றும் பெண்டானில் பிரிவில் கனடா குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமெரிக்காவினால் வியாழக்கிழமை தொடக்கம் விதிக்கப்படவுள்ள automobiles வரியானது ஒவ்வொரு காரும் எவ்வளவு வெளிநாட்டு பொருட்களைக்கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை கண்டறிய ஓர் கட்டமைப்பு நிறுவப்படும் அதனடிப்படையிலேயே வரியும் தீர்மானிக்கப்படவுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
புதன்கிழமை தொடக்கம் அமெரிக்காவின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து அறிய கனேடிய அதிகாரிகள் தொடர்ந்தும் டொனல்ட் ட்ரம்பின் குழுவினருடன் தொடர்பில் உள்ளனர். ஒன்றோரியோ முதல்வர் கடந்தவாரம் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் உடன் கலந்துரையாடியபோதும் இது குறித்து எவ்வித தகவல்களும் பரிமாறப்படவில்லை எனினும் கடந்த வாரம் மார்க் கார்னி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையிலான தொலைபேசி உரையாடல் சுமுகமாக நடைபெற்றதற்கமைய இரு நாடுகளுக்குமிடையிலான விரோதப்போக்கு குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.