11 C
Scarborough

வடக்கில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்கும் செயற்பாடு அரசியல் ஆக்கப்படாது

Must read

வடக்கில் யுத்த காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தை அரசியல் அனுகூலங்களைப் பெறும் நோக்கில் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது.

வடக்கில் பெரும்பான்மையான மக்கள் ஏனைய கட்சிகளை விட தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்திருக்கின்றனர். எனவே அவர்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளை விட எமக்கு பொறுப்புக்கள் அதிகம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் கூட்டப்பட்ட யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, வடக்கில் காணி விடுவிப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எஸ்.ஸ்ரீதரன் கேள்வியெழுப்பிய போது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் அவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஸ்ரீதரன் உரத்த குரலில் கேள்வியெழுப்பிய போது, பதிலளித்த அமைச்சர் பிமல், ‘எனக்கு உங்களை விட உரத்த குரலில் பேச முடியும். உங்களுக்கு தேவையான பிரசாரம் கிடைத்து விட்டதென நினைக்கின்றேன். எனவே தற்போது நான் கூறுவதைக் கேளுங்கள்,’ என்றார்.

காணி விடுவிப்பு தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று சுமந்திரன் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகின்றார்.

அரசாங்கம் எங்குமே நேரடியாகச் சென்று காணிகளை விடுவிப்பதில்லை. இந்த காணி பிரச்சினையை நாம் அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தப்போவதில்லை.

30 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த வீதிகளை நாம் திறந்திருக்கின்றோம். அதற்காக நாம் கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவில்லை.

இராணுவ கட்டளைத் தளபதிகளால் காணி உரிமங்கள் மாவட்ட அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு நாம் பிரசாரங்களை முன்னெடுக்கவில்லை.

அந்த காலப்பகுதியில் பாதுகாப்பு காரணிகளுக்காகவே மக்களின் இடங்கள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு பாதுகாப்பு காரணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை பாதுகாப்பு தேவை இல்லாத பட்சத்தில் மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.

அவ்வாறு காணிகளை விடுவிப்பதற்கு வைபவங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை கிடையாது. நாம் அவ்வாறு செய்யாத நிலையில், சிலர் சென்று எம்மால் தான் காணி விடுவிக்கப்பட்டது எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர். வடக்கிலுள்ள மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவில் வாக்களித்திருக்கின்றனர்.

எனவே உங்களை விட எங்களுக்கு அதிக பொறுப்புக்கள் உள்ளன. எனவே நாம் மக்களுக்காக சேவையாற்றுவோம். ஏனைய ஆட்சி காலங்களை நாம் வடக்கிற்கு அதிக அபிவிருத்திகளை முன்மொழிந்திருக்கின்றோம் என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article