18ஆவது சீசனுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளதோடு, ஒவ்வொரு மைதானங்களிலும் தொடக்க விழா நடத்தப்படுவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடந்துள்ள 6 போட்டிகளில் 2 முறை பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டிருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விவாத பொருளாக மாறி இருக்கிறது.
கொல்கத்தா மைதானத்தில் நடந்த முதல் ஐ.பி.எல் போட்டியிலேயே ரசிகர் ஒருவர் பாதுகாப்பு தடுப்புகளை மீறி, விராட் கோலியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதேபோல் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியிலும், ரியான் பராக்கின் ரசிகர் ஒருவர் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
இந்த இரு சம்பவங்களிலும் ரசிகர்கள் எளிதாக பாதுகாப்பு தடுப்புகளை கடந்து மைதானத்திற்குள் புகுந்துள்ளனர். இதனால் சில நிமிடங்கள் போட்டி நிறுத்தப்படுவதோடு, வீரர்களுக்கும் முக சுளிப்பை ஏற்படுத்துகிறது. 6 நாட்களிலேயே 2 முறை ரசிகர்கள் எளிதாக பாதுகாப்பை மீறிய நிலையில், இந்த ஐ.பி.எல் தொடரில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் தொடரலாம் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் இப்படியான சம்பவங்களில் ஈடுபடும் ரசிகர்களுக்கு என்ன வகையான தண்டனை அளிக்கப்படுகிறது என்பது இதுவரை தெரியவில்லை. கடந்த ஆண்டு ஆர்.சி.பி போட்டியின் போது விராட் கோலியை தொட முயன்ற ரசிகர் ஒருவரை பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்து சென்று, வெளுத்து கட்டினர். பாதுகாப்பு அதிகாரிகளின் இந்த தாக்குதல் வீடியோ சோசியல் மீடியாவில் பேசுபொருளாகியது.
பாதுகாப்பு அதிகாரிகளின் தாக்குதல் மட்டுமல்லாமல், மைதானத்திற்குள் அத்துமீறி செல்லும் ரசிகர்கள் உடனடியாக பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்படுவார்கள். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒருநாள் சிறையில் அடைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. கொல்கத்தாவில் விராட் கோலியின் காலில் விழுந்த ரசிகர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ரூ.1,000 அபராதமும் கட்ட வேண்டும். இந்தியாவில் மைதானத்தில் புகுந்து வீரர்களின் காலில் விழுந்து வணங்குவது சாகச நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இப்படியான சம்பவங்களின் போது வீரர்கள் தாக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.