இலங்கை மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கான விசா கட்டணத்தைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, பல நாடுகள், சுற்றுலாப் பயணிகளாக இங்கு வரும் தங்கள் நாட்டினருக்கும் அதே வசதியை பெற முனைவதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னர், இலங்கை ஏழு நாடுகளுக்கு இந்த வசதியை வழங்கியிருந்தது.
இந்த பட்டியலில் 40 நாடுகளைச் சேர்க்க அரசாங்கம் இப்போது கொள்கை முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு தற்போது சட்டமா அதிபரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. புதிய விசா ஒழுங்குமுறை, சட்டமா அதிபரின் ஒப்புதலுக்குப் பிறகு, பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, சட்டப்பூர்வமாக அமுலாக்கம் செய்யப்படும்.
இது இந்த மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைமுறைக்கு வந்தவுடன், குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு பயணிக்க இலவச விசாவிற்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கிடையில், இந்த வசதியை தங்கள் குடிமக்களுக்கு நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல நாடுகள் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.ஆரம்பத்தில், இலங்கை அதன் முக்கிய மூல சந்தைகளாக இருக்கும் நாடுகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
பட்டியலில் மேலும் நாடுகள் சேர்க்கப்படுவது குறித்து கேட்டபோது, தற்போதைய முடிவை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் அடிப்படையில் இது பரிசீலிக்கப்படும் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தலைவர் புத்திக ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.