முல்லைத்தீவில் 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) திங்கள்கிழமை (18) அறிவித்த அமைதி போராட்டத்திற்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) ஆதரவு தெரிவித்துள்ளது.
“முல்லைத்தீவில் இலங்கை இராணுவத்தினரால் சமீபத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலையால் நாங்கள் சீற்றமடைந்துள்ளோம். பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைகளுக்குள்ளேயே சட்டம் மற்றும் ஒழுங்கு விடயத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளமைக்கான ஆழமான மற்றொரு நினைவூட்டலாக இந்த கொடூர செயல் உள்ளது,” என்று கட்சியின் செயலாளர் எம்.பி. நிஜாம் காரியப்பர் கூறியுள்ளார்.
இன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட அவர், இதுபோன்ற கடுமையான குற்றங்களுக்கு தனது ஆயுதப் படைகளை பொறுப்பேற்கச் செய்வதில் அரசாங்கத்தின் இயலாமை அல்லது விருப்பமின்மை பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது, அத்துடன் அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதேநேரம் “இஸ்ரேலில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு வழங்குவதில் அரசாங்கத்தின் அணுகுமுறை கவலையளிக்கிறது, அவர்களில் பலர் காசாவில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறியதற்காக பரவலாக கண்டிக்கப்படும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) உறுப்பினர்கள் ஆவர் ”
“நமது சொந்த குடிமக்கள் ஆயுதப் படைகளின் கைகளில் வன்முறை மற்றும் அநீதியை எதிர்கொள்ளும் நேரத்தில், இதுபோன்ற கொள்கைகள் தவறான சமிக்ஞையை வெளிப்படுத்துகின்றன” என்று அவர் கூறினார்.