தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை குறித்த நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நட்டம் ஒருபோதும் மக்கள் மீது சுமத்தப்போவதில்லை. மின் விநியோக கட்டமைப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இறக்குமதி செய்யப்பட்ட 13 நிலக்கரி கப்பல்கள் குறித்து மாத்திரமே பேசப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் இருந்து நாட்டுக்கு வந்த 462 நிலக்கரி கப்பல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அதிகாரமிக்க விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்படும். நாட்டு மக்கள் அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (10) ந உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எமது அரசாங்கத்தில் முதல் முறையாக நிலக்கரி கொள்வனவு செய்யப்படவில்லை. 2010 முதல் 2026 மார்ச் வரையிலும் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் முறையான விலைமனுகோரலுக்கு அமைய நிலக்கரி கொள்வனவு செய்யப்படவில்லை. அமைச்சரவை அங்கீகாரத்துடன் மாத்திரமே நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் பிரச்சினை காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். தரமற்ற நிலக்கரி தொடர்பில் எவ்வாறு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்படுகிறது. எதனையும் மறைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.
அமைச்சர் தலையிட்டு தான் இந்த நிறுவனத்துக்கு நிலக்கரி தொடர்பில் விலைமனுகோரல் வழங்கப்பட்டது என்று குறிப்பிடுபவர்கள் அதனை ஆதாரத்துடன் முன்வைக்க வேண்டும்.அதனைத் தவிர்த்து வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்க கூடாது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை குறித்த நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நட்டம் ஒருபோதும் மக்கள் மீது சுமத்தப்போவதில்லை. மின்விநியோக கட்டமைப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இறக்குமதி செய்யப்பட்ட 13 நிலக்கரி கப்பல்கள் குறித்து மாத்திரமே பேசப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் இருந்து நாட்டுக்கு வந்த 462 நிலக்கரி கப்பல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அதிகாரமிக்க விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்படும். நாட்டு மக்கள் அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஊழலுக்கு எதிரான கொள்கைகளை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக்கு வந்தோம்.அந்த கொள்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அரசாங்கத்தின் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் நோக்கம் ஒருபோதும் வெற்றிப்பெறாது என்றார்.

