மத்திய பிலிப்பைன்ஸின் சமர் தீவில் திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 06 அலகுகளாகப் பதிவானதாக அந்நாட்டு நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு சமர் மாகாணத்தில் உள்ள சான் ஜூலியன் நகருக்கு அருகே நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 56 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து கிழக்கு சமர் மாகாண அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தாமஸ் காம்போமனேஸ் தெரிவிக்கையில்,
“நிலநடுக்கம் ஏற்பட்டபோது நாங்கள் ஒரு பந்தைப் போல மேலும் கீழும் தூக்கி எறியப்பட்டது போன்ற உணர்வை எதிர்கொண்டோம். சில கட்டிடங்களில் சிறிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், பெரிய அளவிலான கட்டமைப்புச் சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ இதுவரை பதிவாகவில்லை.”
பாதுகாப்பு கருதி உள்ளூர் அரசு அலுவலகங்களில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்த பின்னரே அவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாடு பசிபிக் கடலின் “நெருப்பு வளையம்” பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு எரிமலைச் சீற்றமும் நிலநடுக்கங்களும் அடிக்கடி நிகழ்வது வழக்கம். அந்த நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 800-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 07 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.
