ஒருநாள் மற்றும் குறிப்பாக T20I சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்குத் தேவையான வேகமான ஓட்டக் குவிப்புக்குத் (பவர்-ஹிட்டிங்) திறன்களை வளர்க்;கும் நோக்கில் நிபுணத்துவ அறிவு கொண்ட பயிற்சியாளரான ஜூலியன் வுட்டின் பயிற்சிகளை பெற இலங்கை கிரிக்கெட சபை முடிவு செய்துள்ளது.
ஆடவர் மற்றும் மகளிர் இலங்கை அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களின் துடுப்பாட்ட திறன்களை மேம்படுத்துவதற்காக ஜூலியன் வுட்டின் சேவைகள் இவ்வாறு பெறப்படவுள்ளது.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெறும் இந்தப் பயிற்சித் திட்டத்தில், கிரிக்கெட் விளையாட்டின் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப உத்திகளை இணைத்து பந்தை அடிக்கும் நுட்பம் மேம்படுத்தப்படும்.
குறைந்த பந்துகளில் அதிக ஓட்டங்கள் பெறுவதும், பந்தை அடிக்கும்போது மைதானத்தில் முடிந்தவரை தூரத்திற்கு பந்தை மேலே அனுப்புவதும் இந்தப் பயிற்சித் திட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.
துடுப்பாட்ட வீரர்களின் ஆற்றல்மிக்க அடித்தல் திறன்களை மேம்படுத்துவதற்காக ஜூலியன் வுட் தேசிய அணியின் பயிற்சியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆற்றல்மிக்க அடித்தல் மேம்பாட்டுத் திட்டம்’ என அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பத்தின் உருவாக்குநராக ஜூலியன் வுட் கருதப்படுகிறார். அவர் இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இடதுகை துடுப்பாட்ட வீரர் ஆவார்.
ஒரு காலத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையுடன் பணியாற்றிய ஜூலியன் வுட், கிளாஸ்டர்ஷயர், ஹாம்ப்ஷயர் மற்றும் மிடில்செக்ஸ் ஆகிய மாகாணங்களின் வீரர்களின் ஆற்றல்மிக்க அடித்தல் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் பணியாற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களுடனும் அவர் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் மற்றும் 2026 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரை இலக்காகக் கொண்டு ஜூலியன் வுட்டின் சேவைகள் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.