முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறைத்தண்டனை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
இன்று வெலிக்கடை சிறையில் ரணிலை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி அமைதியாகவும், தனது நிலைமை குறித்து அக்கறையற்றவராகவும் காணப்பட்டதாக கூறினார்.
“எனக்கு தெரிந்தவரை, ரணில் விக்கிரமசிங்க அரசியலில் தனக்கு என்ன நடந்தது என்பது பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. , சில நேரங்களில் இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,”என்று ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அத்துடன் சிறிய சம்பவங்களுக்காக அரசியல் தலைவர்களை, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளை சிறையில் அடைப்பது நியாயமற்றது.
“இது சரியல்ல. நிர்வாக அதிகாரங்களைக் கொண்ட முன்னாள் ஜனாதிபதிகளை சிறையில் அடைப்பது தவறு. தெளிவாக கூறினால் இது தற்போதைய அரசாங்கத்தின் பழிவாங்கும் செயலைத் தவிர வேறில்லை,” என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தவும், பொதுக் கருத்தை பிரதிபலிக்கவும் ஊடகங்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“தலைவர்களாக, நாங்கள் மக்களை நேசிக்கிறோம், அதற்கு பதிலாக, மக்கள் எங்களை நேசிக்கிறார்கள். அதனால்தான் நான் சவால்களை எதிர்கொண்டபோது பலர் என்னைப் பார்க்க வந்தார்கள்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.