அண்மையில் நிறைவடைந்த சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 10 கோடி அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 2,966 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாக். கிரிக்கெட் சபையின் அறிக்கைப்படி அவர்களது முதலீட்டில் 85 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாக். கிரிக்கெட் சபையானது போட்டிக்கு தயாராக 4 கோடி டொலரும், மைதானங்களை தயார் செய்ய 5.8 கோடி டொலரும் செலவு செய்தது. இவ்வளவு செலவு செய்தும் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. இதன் காரணமாக ஏனைய போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த தொடர் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு 60 இலட்சம் டொலர் மட்டுமே கிடைத்தது. இவை ஐசிசி கொடுத்த கட்டணம், டிக்கெட், விளம்பரம் ஆகியவை மூலம் கிடைத்தன. இந்த நிலையில், பாரிய இழப்பை சமாளிக்க, தேசிய டி20 போட்டியில் விளையாடும் வீரர்களின் சம்பளத்தில் 90 சதவீதத்தை குறைத்துள்ளது. இதன்மூலம் ரூ.1 கோடி சம்பளம் பெற்ற ஒரு வீரர் ரூ.10 இலட்சம் மட்டுமே பெறுவார்.