ஒன்பதாவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகும் நிலையில், மைதானம், அணிகளின் வீரர்கள் தங்கும் ஹோட்டல் உள்ளிட்டவற்றில் 17 ஆயிரம் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த பாக். அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் வீரர்கள் மைதானத்துக்கு செல்லும் இடங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான பணிகளை பஞ்சாப் மாகாண அரசு தொடங்கியுள்ளது.
போட்டிகள் மற்றும் பங்கேற்கும் அணிகளுக்காக பஞ்சாப் அரசு 12,500 பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த இருக்கிறது. சிறப்பு கமாண்டர்கள் உட்பட 7,600 பொலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள் லாகூரில் நடைபெறும் போட்டிகளுக்காக பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
411 சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உட்பட 4,500 பொலிஸார் ராவல்பிண்டியில் பாதுகாப்பை மேற்பார்வையிட இருக்கிறார்கள். தேவைப்பட்டால் இராணுவ உதவியுடன் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் மற்றும் வான் பாதுகாப்பு மூலம் போட்டிகள் கண்காணிக்கப்படும். பொலிஸாருடன் துணை இராணுவ ரேங்கில் உள்ள அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கராச்சியில் நடைபெறும் போட்டிகளுக்காக குறைந்தபட்சம் 05 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமான வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சிந்து பொலிஸ்துறைக்கான செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி விளையாடும் போட்டிகள் டுபாயில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி தகுதி பெறுவது பொறுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவது முடிவு செய்யப்படும். லாகூர் மற்றும் ராவல்பிண்டி பஞ்சாப் மாகாண எல்லையிலும் கராச்சி சிந்து மாகாண எல்லையிலும் உள்ளன. இந்த பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசுகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றன.