கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்தியில், கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
கன்னட மொழியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் கன்னட சாகித்ய பரிஷத் என்ற அமைப்பு, “கன்னடம் மொழி மற்றும் கலாசாரம் தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக்கூறி கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கன்னடம் மொழி, கலாசாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க தடை விதித்ததுடன், மனு குறித்து ஆகஸ்ட் 30க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
குறிப்பாக, கன்னட மொழியை விட மொழியியல் மேன்மையைக் கோரும் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். “கன்னட மொழி, இலக்கியம், நிலம் மற்றும் கலாச்சாரத்தைப் புண்படுத்தும் வகையில் அல்லது, அவதூறு செய்யும் வகையிலோ கமல்ஹாசன் எந்த விதமான அறிக்கைகளையோ, கருத்துகளையோ கமல்ஹாசன் எழுதவோ, பதிவிடவோ கூடாது” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் ஆகஸ்ட் 30 வரை அமலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது