இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டும் என இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்ட இரண்டு மாதங்களுக்குள், வடகடலில் மீன்பிடியில் ஈடுபட வந்த இந்திய மீனவர்கள் இருவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விடயம், இலங்கை அரசாங்கத்தின் மீதான இந்திய அரசாங்கத்தின் கடுமையான விமர்சனத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் (ஜனவரி 27) இரவு இந்திய மீன்பிடி படகை கைப்பற்றுவதற்காக படகில் ஏறிய கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க மீனவர்கள் முற்பட்ட போது, அந்த துப்பாக்கியின் செயல்பாட்டினால் இரண்டு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினதாக கடற்படை தெரிவிக்கின்றது.
இந்திய மீனவர்கள் இரண்டு தோட்டாக்களால் தாக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக மறுதினமே (ஜனவரி 28) இலங்கை அரசுக்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
“புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகர் இன்று காலை இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு, இந்த சம்பவம் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கொழும்பில் உள்ள எங்கள் உயர் ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடம் இதுத் தொடர்பிலான கரிசனையை எழுப்பியுள்ளது” என இந்திய வெளிவிவகார அமைச்சினால் நேற்றைய தினம் (ஜனவரி 28) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இந்திய மீனவர்களான பாபு மற்றும் செந்தமிழன் ஆகியோர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய காரியாலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சாய் முரளி, தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் ஆகியோர் நேற்றைய தினம் (ஜனவரி 28) வைத்தியசாலைக்குச் சென்று மீனவர்களைப் பார்வையிட்டனர்.
காயமடைந்த மீனவர்களை பார்வையிடச் சென்ற தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர், கடலில் மீன்பிடியில் ஈடுபடுவது பற்றி சிகிச்சை பெற்று வரும் இந்திய மீனவரிடம் கேள்வி எழுப்பினார்.
“இலங்கை போடருக்குள் டீமாக எத்தனைப் பேர் சேர்ந்து வந்தீர்கள்? உங்களை மாத்திரம் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள் என்ன? ஏதும் பயப்பட வேண்டாம். பிரச்சினை இல்லை. டார்கட்குள்ள கூட பிடிச்சா பர்சன்டேஜ் இருக்கும் சம்பளத்தைவிட என்ன? அதுக்காகத்தான் இங்கு வருகின்றீர்கள்? இந்த வலை தடை செய்யப்பட்டுள்ளது தானே இந்தியாவில்? பொட்டம் ட்ரோலிங் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் கண்டும் காணாததுபோல் விடுவார்கள். குறுக்கே வரும வலைகளை நீங்கள் அறுத்துவிட்டு செல்வதாக எங்களுடைய மீனவர்கள் சொல்கிறார்கள். உண்மைதானே அது?”
13 மீனவர்கள் விளக்கமறியலில்
ஜனவரி 27, 2025 அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுடன் 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கையின் போது இரண்டு இந்திய மீனவர்கள் கடற்படையின் துப்பாக்கி இயங்கியமைால் காயமடைந்தது குறித்து கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
“கப்பலுக்குள் கடற்படையினர் ஏற விடாமல் தடுக்கும் வகையில் இந்திய மீனவர்கள் அதற்கு செவிசாய்க்காமல், வழக்கமான பணிகளுக்கு இடையூறு விளைவித்து, கடும் எதிர்ப்பை காட்டி, மீன்பிடி கப்பலை ஆக்ரோஷமாக கையாண்டதால், இந்திய மீனவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன், கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலில் ஏறும்போது, கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக தாக்க முயன்றது. கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட போது, அந்த துப்பாக்கியின் செயல்பாட்டினால் இரண்டு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.”
கடற்படையினர் இரு மீனவர்களுக்கும் அடிப்படை முதலுதவிகளை வழங்கியதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, சம்பவம் தொடர்பில் கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸில் முறைப்பாடு செய்ததிருந்தனர்.
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரும் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தகப்பட்ட நிலையில் பெப்ரவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு ‘மனிதாபிமான’ தீர்வு
டிசம்பர் 2024, இலங்கை ஜனாதிபதி தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டபோது, புதுடில்லியில் இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இரு நாட்டுத் தலைவர்களும் மீனவர் பிரச்சினையை ‘முக்கியமானது’ என அடையாளம் கண்டிருந்தனர்.
மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வுகாண வேண்டும் என நாங்கள் கலந்துரையாடினோம் என இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், மனிதாபிமான உதவிகளை வழங்குவது அல்லது பெறுவது தொடர்பில் இனி பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை என மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 2024 டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
“எவ்வாறாயினும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதா அல்லது பெறுவதா என்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை.”
கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் நிறுத்தப்படமாட்டாது எனவும், தொழில்நுட்பம், தொழில்சார் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடல் தொடரும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இராஜதந்திர மட்டத்தில் மாத்திரம் உள்ள பிரச்சினையல்லவென, 28 ஜனவரி 2025 செவ்வாய்கிழமை, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
“இராஜதந்திர ரீதியில் எவ்வளவு விவாதித்தாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என நான் நினைக்கிறேன். ஆனால், எங்களின் கடல் வளங்களையும், மீனவர்களையும் பாதுகாக்க இந்த விடயத்தில் எப்போதும் தலையீடு செய்துகொண்டுதான் இருக்கின்றோம். ”
இந்திய மீனவர்கள் வட கடலில் மீன்பிடிப்பதை குற்றவியல் ஆக்கிரமிப்பு என மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்.