தாய்லாந்திலிருந்து டில்லிக்கு 100 பேருடன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; இதனால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
நவம்பர் 16ம் தேதி இரவு ஏர் இந்தியா விமானம், தாய்லாந்தில் இருந்து டில்லிக்கு புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆறு மணி நேரம் தாமதமாகும் விமான அதிகாரிகள் பயணிகளிடம் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் பல மணிநேரம் காத்திருக்க வைத்த பின்னர், விமானத்தில் ஏறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். 100 பயணிகளில் முதியவர்களும் குழந்தைகளும் அடங்குவர். சிறிது நேரம் கழித்து, விமானம் பறக்கத் தயார் செய்யப்பட்டது.
புறப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரம் கழிந்த நிலையில், அந்த விமானம் மீண்டும் புக்கெட்டில் தரையிறங்கியது. தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக மீண்டும் பயணிகளிடம் விமான ஊழியர்கள் தெரிவித்தனர்.