செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
எனவே, இனவழிப்பின் பங்காளியாகத் திகழ்ந்த தற்போதைய அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது எனவும், சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே செம்மணி விவகாரத்தில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டமுடியும் எனவும் அவர் கூறினார்.
செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சர்வதேச தடயவியல் நிபுணர்களின் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் பின்னணியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
‘கிருஷாந்தி குமாராசுவாமியின் படுகொலை தொடர்பான விசாரணைகளை அடுத்து 1999 ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.
அதன் பின்னர் சர்ச்சைக்குரிய அந்த மனிதப்புதைகுழி விவகாரம் தொடர் விசாரணைகளின்றி இடைநடுவே முடக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போதும்கூட செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தின் புனரமைப்புப்பணிகளின்போது தற்செயலாகத்தான் இந்த மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ஒருபோதும் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்கப்போவதில்லை.” -எனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.