சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க அரசாங்கம் சிலகடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கீரிசம்பாவிற்கு மாற்றாக இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதும் எமது தீர்மானங்களில் ஒன்றாக இருக்கிறது என அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
அனுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
பெரும்போக பருவத்தில் எதிர்பார்த்தபடி 500,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நெல் பயிரிடப்பட்டுள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில், அரிசி சந்தையில் பற்றாக்குறை ஏற்படாது என நம்புகிறோம். இருப்பினும், வானிலை அல்லது பிற காரணிகளால் அறுவடை குறைந்தால், நாங்கள் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.
கடந்த சில நாட்களில் கிடங்குகளில் உள்ள அரிசியின் அளவைப் பார்த்தால், 670 களஞ்சியசாலைகளில் 85,000 மெட்ரிக் தொன் கீரிசம்பா உள்ளது. மேலும் பொலன்னறுவையில் உள்ள நெல் ஆலைகளில் 75,000 மெட்ரிக் தொன் உள்ளது. இந்த மக்கள் 75,000 மெட்ரிக் தொன் கீரிசம்பாவை வைத்து ஒரு கிலோவை 300க்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அதை 1,300 ரூபாவிற்கு 5 கிலோ பையில் இட்டு 1,500 விற்கு வெளியே விற்கிறார்கள்.
அரிசி சந்தையில் மேலும் பற்றாக்குறையை உருவாக்கி மாஃபியாக்களை உருவாக்க முயற்சித்தால், அதை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்.இதன் காரணமாகவே கீரிசம்பாவிற்கு மாற்றாக 40,000 மெட்ரிக் தொன் GR11 வகை அரிசியை கொண்டு வர முயற்சிக்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.