கொலம்பியாவின் தெற்கு கௌகா பிராந்தியத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில், சிறுவர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்னன.
இந்தத் தாக்குதலுக்கு லத்தீன் அமெரிக்காவின் பழமையான கிளர்ச்சிக் குழுவான ‘பார்க்’ அமைப்பிலிருந்து பிரிந்த தீவிரவாதக் குழுக்களே காரணம் என கொலம்பிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
“இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்களை எமது சிறந்த வீரர்கள் எதிர்கொள்வார்கள்” என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு கண்மூடித்தனமான காட்டுமிராண்டித்தனம் என்றும், இந்தப் பயங்கரவாதத்தை கௌகா தனித்து எதிர்கொள்ள முடியாது என கௌகா பிராந்திய ஆளுநர் ஆக்டேவியோ குஸ்மான், தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் எதிர்வரும் மே 31-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2016-ஆம் ஆண்டு எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் சிதைந்ததைத் தொடர்ந்து, சமீபகாலமாக அந்நாட்டில் அரசியல் வன்முறைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
கடந்த வருடம் ஜூன் மாதம் ஒரு பேரணியில் வலதுசாரி வேட்பாளர் மிகுயல் யூரிப் துர்பே மீது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலவும் சூழலில், ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட இடதுசாரி செனட்டர் ஐவன் செபெடா தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் உள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கௌகா மற்றும் காலி ஆகிய நகரங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பஸ் ஒன்று வெடிக்கத் தவறிய நிலையில் மீட்கப்பட்டதாகவும், இது ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சதி எனவும் பாதுகாப்புத் அமைச்சர் பெட்ரோ அர்னால்போ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

