பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தேசிய தலைவர்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகியுள்ளது.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் எதிர்வரும் 30 ஆம் திகதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பரமக்குடியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
படத்தில் சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் சில வசனங்கள் உள்ளன இராமநாதபுரம் மாவட்டத்தில் அடிக்கடி சாதிய மோதல்கள் நடக்கும் நிலையில் சர்ச்சைக்குரிய வசனங்களுடன் படத்தை வெளியிடுவது மீண்டும் மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.
எனவே இந்த படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கக்கூடாது வழங்கி இருந்தால் அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளதால் சர்ச்சைகுறிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து மத்திய அரசு சார்பில் தணிக்கை குழு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி உள்ளதாக தெரிவித்து அது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினர். இதை அடுத்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு தள்ளி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

