பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கையின் முதற்கட்ட அணியில் துடுப்பாட்ட வீரர்களான பானுக ராஜபக்ச மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
2026 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக அணியின் துடுப்பாட்ட திறனை வலுப்படுத்தும் நோக்கில் அடுத்த மாதம் இடம்பெறும் இந்த போட்டிக்கு அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 11 ஆம் திகதி தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கும் டி20 முத்தரப்பு தொடர் நடைபெறும்.
22 பேர் கொண்ட டி20 போட்டிக்கான முதற்கட்ட அணியில் இரு வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்வாளர் உபுல் தரங்க உறுதிப்படுத்தினார்.
“அவர்கள் இருவரும் சேர்க்கப்படுகிறார்கள். உலகக் கிண்ணத்துக்கான சுமார் 22 பேர் கொண்ட அணி எங்களிடம் உள்ளது. அதிலிருந்துதான் நாங்கள் அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ராஜபக்ச மற்றும் டி சில்வா இருவரும் உயர் செயல்திறன் மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர், மேலும் அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர், ”என்று தரங்க கூறினார்.
தனது ஆக்ரோஷமான மிடில் ஆர்டர் துடுப்பாட்டத்துக்கு பெயர் பெற்ற ராஜபக்சவும், தொழில்நுட்ப ஸ்திரத்தன்மை மற்றும் ஆஃப்-ஸ்பின் விருப்பங்களை வழங்கும் டி சில்வாவும், 2022 ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.
இலங்கையில் நடத்தப்பட உள்ள டி 20 உலகக் கிண்ணத்துடன், தனஞ்சய டி சில்வாவை சகலதுறை ஆட்டக்காரராக பயன்படுத்த தேர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அவரது பேட்டிங் சராசரி 21.17 வீதமாகவும் மற்றும் பவுலிங் சராசரி 20.43 வீதமாகவும் உள்ளது.

