பாகிஸ்தான் படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாண எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் ராணுவ வீரர்கள் தர்ஷா கேல் பகுதிக்கு விரைந்தனர்.
பின்னர் உள்ளூர் பொலிஸாருடன் இணைந்து ராணுவமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. இதன்போது பயங்கரவாத முகாம் அருகே நெருங்கிய படையினரை பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 ராணுவ வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கி. வெடிமருந்து போன்றவையும் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து பயங்கரவாதிகள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பே காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
எனவே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை தவிர்க்குமாறு பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானை வலியுறுத்தியது. ஆனால் தலீபான்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

