கரூர் பகுதி கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை(29) விசாரணை இடம்பெறவுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபானியிடம் த.வெ.க நிர்வாகிகள் முறையீடு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் த.வெ.க இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் தெரிவித்ததாவது,
கரூர் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டுள்ளோம். நாளை மதியம் 2.15 மணியளவில், உயர்நீதிமன்ற அமர்வில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்.
நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தற்போதைக்கு மேற்படி எதுவும் பேச வேண்டாம்.நாளைய விசாரணைக்குப் பிறகு த.வெ.க தரப்பு கருத்தைத் தெரிவிப்போம் . என்று கூறினார்.
கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவும் த.வெ. கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்தோடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.ஜோதிமணி ஆகியோர் இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தை கூறும்போது, “கரூரில் நடைபெற்ற த.வெ.க பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

