நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் இல்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 5 வருடங்களும் முழுமையாக செயல்பட நாம் ஒத்துழைக்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் பேசும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில், “இந்த ஸ்டேஜுக்கு வந்தபின், ஒரே சமயத்தில் 20 ஆயிரம் பேரின் கவன ஈர்ப்பின் ஸ்டேஜில் இருக்கும் போது, ஒவ்வொரு வார்த்தையையும் அளவெடுத்து பேசும் ஸ்டேஜில் இருக்கிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் யாவரையும் சந்தோஷப்படுத்த முடிவெடுத்தபடியே படியேறுகிறேன். இருப்பினும் அது ஒரு சார்பு நிலைக்குள் நிலைகுத்தி நிற்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 5 வருடங்களும் முழுமையாக செயல்பட நாம் ஒத்துழைக்க வேண்டும்.
அதில் ஏற்படும் விருப்பு வெறுப்பை காட்ட 2026-ன் ஓட்டுப்பெட்டி இருக்கிறது. எனவே நான் ஆளும்கட்சிக்கு எதிரானவன் இல்லை. மக்களாட்சி எனில் மக்களுக்கும் அரசியல் தெரிந்திருக்க வேண்டும்.
அந்த வகையில் யார் அரசியலுக்குள் விஜயம் செய்தாலும் அவர்களை வாழ்த்த வேண்டும். போட்டி வலுத்தாலே ஆரோக்கிய அரசியல் அமையும். யாரிடமும் பெட்டி வாங்கிக் கொண்டு ஆதரவு ஆரத்தி எடுப்பதில்லை.
அதற்காக பெட்டி பாம்பாக மூடிக் கொண்டும் இருப்பதில்லை. ‘தில்’லை பேச்சில் மட்டுமே இல்லாமல் செயலிலும் காட்ட, பணத்துக்காக சோரம் போகாத நேர்மை வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

