நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
லண்டனில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, டிரம்ப் இத்தகவலை தெரிவித்தார்.
“நாங்கள் அமெரிக்க படைகளை மீண்டும் அங்கு அனுப்பி வைக்க முயன்று வருகிறோம்” என்று அவர் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது , மக்ராம் விமான தளம் உலகிலேயே மிகவும் வலிமையானது. அங்கு எதை வேண்டுமானாலும் நிறுத்தலாம். மேலும், அந்த விமான தளம் சீனாவுக்கு அருகில் உள்ளது.
சீனா அணு ஆயுதங்களை தயாரிக்கும் இடத்தில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இருக்கிறது. அத்தகைய இடத்தை ஜோ பைடன் விட்டுக்கொடுத்திருக்கக்கூடாது.
அவர் முற்றிலும் தகுதியற்றவர். தலீபான்களுக்கு எங்களிடம் இருந்து நிறைய தேவைப்படுகிறது. எனவே, அந்த விமான தளத்தை திரும்பப்பெற முயன்று வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மக்ராம் விமான தளம். சீனாவுக்கு அருகில் இருக்கிறது. எனவே, சீனாவுக்கு பதிலடியாக அங்கு அமெரிக்க படைகள் இருப்பது அவசியம் என்று டிரம்ப் கருதுகிறார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த 2001-ம் ஆண்டு, அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் உள்ளிட்ட கட்டிடங்களை அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தால் மோதி தகர்த்தனர். அதற்கு பதிலடியாக அல்கொய்தாவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின.
பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு பதவியேற்றது. அங்கேயே அமெரிக்க படைகள் முகாமிட்டன. இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். முதல்முறை ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
2021-ம் ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. இதனை அடுத்து அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்து, தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சி கெடுபிடியாக இருக்கும் என்று கருதிய ஆப்கன் மக்கள் ஏராளமானோர் விமானங்கள் மூலம் நாட்டை விட்டு தப்பி ஓடினர். என்பது குறிப்பிடத்தக்கது.