ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக, ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியா கோஸ்டா ஆகியோர் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘நாங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினோம். உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை மிகவும் வரவேற்கிறோம்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதிலும், அமைதிக்கான பாதையை உருவாக்குவதிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தப் போர் உலக பாதுகாப்பை கெடுப்பதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கிறது. எனவே இது முழு உலகிற்கும் ஒரு அச்சுறுத்தலாகும்.
2026ம் ஆண்டின் தொடக்கத்தில், அடுத்த ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உச்சி மாநாட்டில் ஒரு கூட்டு மூலோபாய நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த ஆண்டின் முடிவுக்குள் தடையில்லா வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடிக்க நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.