உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கானோர். அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை பெற்று அங்கு வசிக்கும் நிலையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது எனவும் அங்கு சட்டவிரோதமாக குடியேறிவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்பட ஏராளமானோர், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர். இந்தநிலையில் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்த 5.5 கோடி பேரின் விசாக்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்தது.
இந்த சோதனையின்போது விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது முறைகேடாக விசா பெற்று இருப்பவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்று டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ்தள பதிவில், ‘அமெரிக்காவில் ஓடும் லோரிகளில் வெளிநாடுகளை சேர்ந்த சாரதிகள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகிறார்கள்.
இது அமெரிக்க சாரதிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. எனவே இனி வெளிநாடுகளில் இருந்து வரும் சாரதிகளுக்கு அமெரிக்க விசா வழங்குவது நிறுத்தப்படும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களில் இந்தியர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த விசா சரிபார்ப்பு நடவடிக்கையில் இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் விதிகளை மீறியவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை என்பதால் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை என்று கூறப்படுகிறது.