ஐக்கிய மக்கள் சக்தி இணையவழி கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை சட்டவிரோத மாஃபியா என்று கூறிய அவர் ‘கட்சி என்ற முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இணையவழி கடன் மாஃபியா பற்றிய தகவல்கள் முதன்முதலில் வெளிவந்தபோது, நாம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். இதன் விளைவாக, அப்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் புதிய பிரேரணையை முன்வைக்க நடவடிக்கை எடுத்தது,” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
“எனினும், இந்தக் கடன் மாஃபியா இன்னும் நம் நாட்டில் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது,”
தற்போதைய பொருளாதார சிக்கல்கள் அத்தகைய நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கும் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் இந்த இணையவழி கடன் மாஃபியாவில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பற்றிய விரிவான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இலவச சட்ட உதவியை வழங்குவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
“எங்கள் சட்டக் குழுவை அணுகுவதன் மூலம், இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். பாதிக்கப்பட்ட அனைவரும் கவலைப்பட வேண்டாம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்; நிச்சயமாக உங்களுக்கு உதவ நாங்கள் முன்வருவோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.