என் வெற்றிகளில் பெரிய பங்கு உள்ளது என்று அன்பறிவுக்கு லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ’மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ மற்றும் ‘கூலி’ ஆகிய படங்களுக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர்கள் அன்பறிவ். இப்படங்களின் சண்டைக் காட்சிகள் மிகவும் பிரபலம். தற்போது அன்பறிவுக்கு நன்றி தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
அப்பதிவில் “எனது இயக்குநர் வாழ்க்கையின் முதல் நாளில் இருந்து இன்று வரை எனக்கு தூண்களாக இருப்பவர்கள் அன்பறிவ். அவர்களை பற்றி கூறுவது இதுவே சரியான தருணம். நான் இப்போது இருக்கும் இடத்தில் என்னை பார்க்க அவர்கள் முதலில் இருந்தே விரும்பினார்கள். என் வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்து வெற்றிகளிலும் அவர்களுக்கு எப்போதும் ஒரு பெரிய பங்கு உண்டு. அதற்காக உங்கள் இருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், நீங்கள் இயக்குநர்களாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன். உங்களை என்றென்றும் நேசிக்கிறேன் மாஸ்டர்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.