கொல்கத்தா: அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும் மெஸ்ஸி சந்திக்கிறார்.
லயோனல் மெஸ்ஸி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தை முன்பதிவு செய்வது உட்பட அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டு விட்டதாகவும் ஆனால் மெஸ்ஸியிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப் படுத்தலுக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் காத்திருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
மெஸ்ஸியின் சுற்றுப்பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம், ஒருவேளை இதுதொடர்பான அறிவிப்பு மெஸ்ஸியின் சமூக வலைதள பக்கத்தில் விரைவில் வெளியாகக்கூடும்” என கொல்கத்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயணத்திட்டத்தின்படி, லயோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் 12-ம் தேதி இரவு 10 மணியளவில் கொல்கத்தாவுக்கு வந்து சேருவார். இங்கு அவர், இரண்டு பகல், ஒரு இரவு தங்குவார். 13-ம் திகதி காலை 9 மணி அளவில் பிரபலங்களுடன் நடைபெறும் சந்திப்பு நிகழ்ச்சியில் மெஸ்ஸி கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து கொல்கத்தா விஐபி சாலையில் உள்ள லேக் டவுன் பூமியில் அமைக்கப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைக்கிறார். உலகிலேயே மெஸ்ஸிக்கு வைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலையாக இது அமையும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் செல்லும் லயோனல் மெஸ்ஸி, அங்கு பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் இசை நிகழ்ச்சி மற்றும் கோட் (GOAT) கோப்பை போட்டியில் கலந்து கொள்கிறார். சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி ஆயிரக்கணக்கான குழந்தைகளுடன் உரையாடவும் உள்ளார் என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது