அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீது விதித்த வரிகள் தொடர்பாக நம்பிக்கையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த புதன்கிழமை (ஜூலை 9) க்கு முன்னர் நாட்டிற்கு அறிவிக்கப்படும் என்றும் தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த ‘தனியார் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அமரிக்கவினால் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு 90 நாட்களுக்கு வழங்கப்பட்ட வரி நிவாரணம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் இலங்கை அமெரிக்காவுடன் குறித்த வரிகள் தொடர்பாக இரண்டு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த விடயத்தில் ஆசிய பிராந்தியத்தில் இலங்கை அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஏற்றுமதி சந்தை ஒரு பிரச்சினையாக இருக்காது எனவும், தற்போதைய நிலையைக் கடந்து வர்த்தக முதலீடு செய்யப்படும் எனவும், அமெரிக்காவுடன் புதிய உறவுகள் நிறுவப்படும் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 90 நாள் வரி சலுகை ஜூலை 9 ஆம் திகதி காலாவதியாகும் என்றும், அதை நீட்டிக்கத் திட்டமிடவில்லை என்றும், அமெரிக்காவுடன் வணிகம் செய்யாவிட்டால் வர்த்தக தடை விதிக்கப்படும் எனவும் அந்தந்த நாடுகளுக்குத் தெரிவிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் கூறினார்.
தற்போது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமரிக்க ஜனாதிபதி அலுவலகம் கடிதங்களை அனுப்பி வருகிறது, அதில், “வாழ்த்துக்கள், நாங்கள் உங்களை அமெரிக்காவில் கொடுக்கல் வாங்கல் செய்ய அனுமதிக்கிறோம். நீங்கள் 25% வரி அல்லது 35% அல்லது 50% அல்லது 10% வரியை செலுத்தப் போகிறீர்கள்” என குறிப்பிடப்பட்டுளளது என அமைச்சர் குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.