மகன் வீடியோவை நீக்கச் சொல்லி வற்புறுத்தல் செய்ததாக வெளியான தகவலுக்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் ‘ஃபீனிக்ஸ்’. இதன் ப்ரீமியர் காட்சியில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். அப்படம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, “என் மகனுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. இங்கு படம் பார்த்த அனைவருக்கும் படம் எப்படி பிடித்ததோ, அதே மாதிரி திரையரங்கில் படம் பார்க்க வருபவர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று பேசினார் விஜய் சேதுபதி.
அப்போது பத்திரிகையாளர்கள், “மகன் சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்கச் சொல்வதாக தகவல்கள் வருகிறது” என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஜய் சேதுபதி, “தெரியாமல் நடந்திருக்கும். வேறு யாரேனும் செய்திருப்பார்கள். மன்னித்துவிடுங்கள்” என்று தெரிவித்தார் விஜய் சேதுபதி.
அனல் அரசு இயக்கி, தயாரித்துள்ள படம் ‘ஃபீனிக்ஸ்’. இதில் சூர்யா விஜய் சேதுபதி, வரலட்சுமி, தேவதர்ஷினி, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ப்ரவீன் கே.எல் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.