அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தான் நினைத்ததையெல்லாம் சாதித்துக்கொண்டிருக்கிறார் என்றே கூறலாம்.
அமெரிக்கா மற்ற நாடுகள் மீது வரிகள் விதிக்கிறது. சிலரைத் தவிர்த்து, வாய் பேசாமல் அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறார்கள் பல நாடுகளின் தலைவர்கள்.
ஆனால், அமெரிக்கா மீது கனடா வரி விதித்தால், உடனே வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக மிரட்டுகிறார் ட்ரம்ப்.
கனடாவில் இயங்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரி தொடரும் என கனடா தரப்பு தெரிவித்திருந்தது.
உடனே, டிஜிட்டல் சேவை வரி விதித்தால், கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அறிவித்த ட்ரம்ப், கூடுதல் வரிகள் விதிப்பேன் என மிரட்டினார்.
அதைத் தொடர்ந்து, டிஜிட்டல் சேவை வரி விதிக்கும் திட்டத்தை கைவிடுவதாக கனடா அறிவித்தது.
பெரிய அளவிலான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக கனடா அரசு டிஜிட்டல் சேவை வரி விதிப்பை கைவிடுவதாக கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று தெரிவித்தார்.
ஆக, மீண்டும் கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா துவங்கியுள்ளது.
என்றாலும், கனடாவை கேலி பேசுவதையும் அவமதிப்பதையும் விடவில்லை அமெரிக்கா.
வெள்ளை மாளிகை ஊடகச் செயலரான கரோலின் (Karoline Leavitt), கனடா டிஜிட்டல் சேவை வரி விதிக்க முயற்சித்ததன் மூலம் தவறு செய்துவிட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை ட்ரம்பை தொலைபேசியில் அழைத்த கார்னி வரிவிதிப்பைக் கைவிடுவதாகத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் நிறுத்தாமல், ட்ரம்ப் கொடுத்த அழுத்தம் காரணமாக, மார்க் கார்னி வளைந்துகொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளது வெள்ளை மாளிகை தரப்பு.
ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தபோதும் அமெரிக்கா கனடாவை கேலி பேசி வந்தது. இப்போது கனடாவில் ஆட்சி மாறினாலும் அவமதிப்பு மட்டும் மாறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.