ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் ‘மைசா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்துக்கு ‘மைசா’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் முழுக்க நாயகியை மையப்படுத்தியே படமாக்க உள்ளார்கள். முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவீந்திர புள்ளே இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. ராஷ்மிகா மந்தனாவின் மிரட்டலான லுக்குக்கு பல்வேறு பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும், படப்பிடிப்புக்கு ஆர்வமாக இருப்பதாகவும் ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் ரவீந்திர புள்ளே, “‘மைசா’ இரண்டு வருடங்கள் உழைத்து உருவாக்கிய படமாகும். இப்படத்தின் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளோம். கதை, கதாபாத்திரங்கள், கலை நுணுக்கம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும். இப்போது, இந்தக் கதையை உலகுக்குச் சொல்லத் தயாராக இருக்கிறோம். கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட மிகவும் உணர்ச்சிகரமான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் இது” என்று தெரிவித்துள்ளார்.