ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜேர்மனி, பயங்கரவாதத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு எனவும் அறிவித்துள்ளது.
ஜேர்மன் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல்லை சந்தித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து இருவரும் கூட்டாக ஊடக சந்திப்பை நடத்தினர். இதன்போது,
” காஷ்மீரில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவம் கவலை அளிக்கிறது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்.
பயங்கரவாதத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. ராணுவ தாக்குதலுக்கு பிறகு, போர் நிறுத்தம் அமுலில் இருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம்.” – என்று ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
‘பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக் கொள்ளாது. இந்தியாவை அணு ஆயுதம் கொண்டு மிரட்ட முடியாது. ஒவ்வொரு நாட்டிற்கும் தன்னை காத்துக் கொள்வதற்கான உரிமை உள்ளது என்ற ஜேர்மனியின் கருத்தை நாங்கள் மதிக்கிறோம்.” – என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் குறித்த ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்டார்.