15.4 C
Scarborough

கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான உறவுகளுக்கு நீதி வேண்டும் – சாணக்கியன் எம்.பி!

Must read

கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான உறவுகளுக்கு நீதி வேண்டும் பாராளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன் இன்றைய சபை அமர்வில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்ற வாரம். 16 ஆண்டுகளுக்கு முன்னர் மிக முக்கியமாக இறுதி போரின் போது ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட வாரம் தான் கடந்த வாரம்.

அவ்வாறு கொல்லப்பட்ட மக்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன், கொல்லப்பட்ட மக்களுக்கு அவர்களது உறவினர்கள் எதிர்பார்க்கும் நீதி இன அழிப்புக்கான நீதியை இதுவரைக்கும் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தர மறுத்திருக்கிறார்கள்.

இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலும் அது நடக்கும் அந்த நீதி கிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த நாட்டில் நடைபெற்றது ஒரு இன அழிப்பு. ஆனால் அதனை சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிப்பது கடினம் என்று சிலர் கூறிய கருத்துக்களை வைத்துக் கொண்டு நாட்டிலே இன அழிப்பு நடக்கவில்லை என்று இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த நாம் கூறுவதாக மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள்.

ஆனால், இந்த நாட்டில் நடைபெற்ற இன அழிப்பிற்கு நீதி வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக சர்வதேச ரீதியாகவும் சரி உள்நாட்டிற்குள்ளும் சரி இதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரதானமான கட்சி இலங்கை தமிழரசு கட்சி தான். அதை மக்களின் சார்பாக நின்று தொடர்ச்சியாக நாம் செய்வோம். கடந்த வாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு அரசியல் பின்னணி இன்றி தாமாக முள்ளிவாய்க்காலில் ஒன்று சேர்ந்து இருந்தார்கள்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கப்பட்டது. இதெல்லாம் அரசியல் பின்னணியில் நடந்த விடயங்கள் அல்ல. எங்களுடைய மக்கள் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதை நீங்கள் மறுக்க முடியாது.

அண்மையில் கனடாவில் இன அழிப்பு சம்பந்தமாக ஒரு சின்னம் உருவாக்கப்பட்ட போது, எமது வெளிவிவகார அமைச்சர் கனடா தூதுவரை அழைத்து பெரிய ஒரு விளக்கம் கொடுத்திருந்ததை நான் பார்த்திருந்தேன். ஆனால் நடக்க வேண்டியது என்ன? இந்த நாட்டிலே தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதா இல்லையா என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அதற்கு இலங்கை அரசாங்கம் பிழை செய்யவில்லை என நீங்களும் இந்த அரசாங்கமும், அந்த காலப்பகுதியில் இந்த அரசாங்கம் இருக்கவில்லை.

அப்போது ஆட்சியில் இருந்தவர்களை இந்த அரசாங்கமும் பாதுகாக்க நினைக்கின்றார்கள் என்றால் அது வேறு விடயம். ஆனால் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிடும் இந்த அரசாங்கம், உண்மையில் அந்த குற்றங்களை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என நினைத்தால் இந்த விடயத்திற்கு ஒத்துழைப்பை வழங்கலாம். விசாரணைகளை ஆரம்பிக்கலாம். ஆனால் உள்நாட்டு விசாரணையும் இல்லை. சர்வதேச விசாரணையும் இல்லை. தொடர்ச்சியாக தமிழ் மக்கள் நீதி இல்லாத நிலைக்கு தள்ளப்படுவது தான் இந்த அரசாங்கத்தின் நோக்கம் என்பது எமக்கு தெளிவாக தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article