இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்று காலை பாகிஸ்தான் இந்தியாவின் 15 இடங்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் அவைகளை இடைமறித்து தாக்கி அழித்தது. அதேவேளையில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அங்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வருகிற 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் டிரோன் தாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரிப்பு காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமா? என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு யோசிக்க தொடங்கியது.
ஏனென்றால் டேவிட் வார்னர், ஜேசன் ஹோல்டர், வான் டர் டுசன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
மேலும், பாகிஸ்தான் அரசின் ஆலோசனையை கிரிக்கெட் போர்டு பன்பற்றும் எனத் தெரிகிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் சிஇஓ சல்மான் நசீர், வெளிநாட்டு வீரர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இந்த சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என உறுதி அளித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தால் வெளிநாட்டு வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.